சென்னையின் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வரும் அக்.17 வரை வாகனங்களை நிறுத்தவேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (அக்.15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருகிறது. இதனால் இன்று காலை தொடங்கி தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இந்தக் கனமழையால் தங்களின் கார்கள் பாதிப்படையக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் சென்னையின் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில், நேற்று மாலை தங்களது கார்களை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மேம்பாலங்கள் மீது நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என காவல்துறை அறிவித்தது.
அதேபோல, கனமழை காரணமாக நேற்று முதல் சென்னையின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, `இன்று (அக்.15) தொடங்கி வரும் அக்.17 வரை, கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தவேண்டாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை நேரத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் நேற்று (அக்.15) அறிவித்தது.