
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து வரும் நவ.29 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அடுத்த 2 நாட்களுக்கு, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு, வடமேற்கு திசையில் அதாவது தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று (நவ.25) தொடங்கி, வரும் 29 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அத்துடன், சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.