
ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 1) வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியதாவது,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 3 அன்று, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், குறிப்பாக நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவங்கங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஏப்ரல் 2) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.