
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக பகுஜன் சமாஜின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கட்சிப் பதவியில் இருந்து பொற்கொடியை நீக்கியது தொடர்பாக, தமிழக பகுஜன் சமாஜின் மத்திய ஒருங்கிணைப்பாளர் நேற்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையில் ஆளும் கட்சிக்கு சம்மந்தம் இல்லையென்றால், கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக நிர்வாகக் குழு மறுசீரமைக்கப்பட்டுப் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசியத் தலைவர் மாயாவதியின் அறிவுறுத்தலின்படி, குடும்பம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ விசாரணை தொடர்பாக மட்டுமே இனி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கவனம் செலுத்துவார்.
கட்சி நடவடிக்கைகளில் இனி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஈடுபடமாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கட்சிப் பணிகளை கவனிப்பார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி அசைக்க முடியாத ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்.
கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் மாநிலத் தலைவர் ஆனந்தன் தலைமையில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.