ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார் முதல்வர்.
Published on

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரது உடல் செங்குன்றத்தை அடுத்த பொத்தூரில் கடந்த 8 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரிடம் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முதல்வர் உறுதியளித்தார்.

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி மரியாதைக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்து தரப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு என இயக்குநர் பா. இரஞ்சித் கேள்வியெழுப்பியிருந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in