
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக 27 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுமாறு ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வழக்கை விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு காவல் துறையினர் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக 6 மாதங்களில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும், அரசியல் மற்றும் ஊடகங்களின் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Armstrong | Madras High Court | CBI | Armstrong Murder | Bahujan Samaj |