ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழக அரசும், காவல் துறையும் சரியான திசைகளில் பயணிப்பதாக இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ல் காவல் துறையினரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி பகுஜன் சமாஜ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் மனைவியும், பகுஜன் சமாஜ் மாநில ஒருங்கிணைப்பாளருமான பொற்கொடி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் பா. இரஞ்சித்தும் கலந்துகொண்டார்.
ஆற்காடு கொலை வழக்குடன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைத் தொடர்புபடுத்தியது தொடர்பாகவும், காவல் துறை விசாரணை சரியாக இருப்பதாகவும் அவர் பேசினார்.
"இந்த வழக்குக்கு ஒரு முடிவுகட்ட காவல் துறை தொடக்கத்திலேயே முயற்சி செய்தது. உடனடியாக நாம் இதை எதிர்த்தோம். ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அந்தக் கொலையை வைத்து ஒரு கதை உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல குற்றவாளிகள் உள்ளார்கள். இந்த வழக்கில் சரியான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என நாம் மிகவும் வலிமையாக் கோரிக்கை வைத்தோம்.
இதன்பிறகு தமிழக அரசும், புதிதாகப் பொறுப்பேற்ற சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு வழக்கை பல திசைகளில் கொண்டு சென்றார்கள்.
இதன் விளைவாக பல முகம் அறியாத, பின்புலத்தில் இயங்கிய பல குற்றவாளிகளின் பெயர்கள் வெளியே வந்தன. இவர்களுடையப் பெயர்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.
அண்ணனுடன் (ஆம்ஸ்ட்ராங்) இருந்த நீங்களா இப்படிச் செய்தீர்கள், நீங்கள் இவ்வளவு மோசமான ஆட்களா, உங்களை நம்பிய அண்ணனை இப்படிச் செய்துவிட்டீர்களே என ஒவ்வொரு முறையும் நமக்கு அதிர்ச்சி உண்டானது" என்றார் பா. இரஞ்சித்.
வழக்குப்பதிவு:
இந்தப் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். அனுமதியின்றி கூடியதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குநர் பா. இரஞ்சித் உள்பட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.