
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் உயிரிழந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 27 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரௌடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2000-வது ஆண்டு முதல் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் மத்திய சிறையிலிருந்து வந்தார் நாகேந்திரன். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட ஏறத்தாழ 30 வழக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. சிறையிலிருந்தபடியே ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத் திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தபோதிலும், கல்லீரலில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் முதல் இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
Armstrong | Armstrong Murder | Nagendran | Nagenthiran |