
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழிவாங்கும் செயலுக்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஏசிபி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) அஸ்ரா கர்க் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 8 பேரைக் கைது செய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த ஆயுதங்கள், ஒரு ஸோமேட்டோ டி-ஷர்ட், ஒரு ஸோமேட்டோ பை மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் துறையால் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் சந்தேகத்துக்குரிய மேலும் 3 நபர்களைக் கைது செய்தது.
கடந்தாண்டு ஆகஸ்டில் ஆற்காடு சுரேஷ் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை ஆம்ஸ்ட்ராங் வழிகாட்டுதலில் அல்லது அவருடைய சதித்திட்டத்தில் நடந்ததாக ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நம்பியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்தார்கள். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஆற்காடு சுரேஷின் சகோதரரும் ஒருவர்" என்றார்.
முன்னதாக, சனியன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று கூறினார்.