ஆம்ஸ்ட்ராங் வழக்கு மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரும் இடம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அரசிடம் மனு அளிக்கலாம்
ஆம்ஸ்ட்ராங் வழக்கு மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு
1 min read

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணை மதியம் 12 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

`ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்கத் தயார். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் அதற்காக விதிகளை மீற முடியாது' என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

`விஜயகாந்தை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியது. அது போல பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்ய அனுமதி வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய பெரம்பூரில் 7,500 சதுர அடியில் வேறொரு இடத்தை வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், `ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் கட்சி இடம் குடியிருப்புப் பகுதியாக உள்ளது. எனவே அரசு தரும் இடத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார் அங்கே மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்’ என்றார்.

`ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரும் இடம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி அரசிடம் மனு அளிக்கலாம். பொற்கொடி அளிக்கும் மனுவை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இன்றே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்’ என்றார் நீதிபதி பவானி சுப்பராயன்.

இது தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியிடம் கேட்டுவிட்டு பதிலளிக்குமாறு கூறி வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி பவானி சுப்பராயன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in