10.5%-ஐ விட வன்னியர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவமா?: தரவுகளும் ராமதாஸ் அறிக்கையும்!

அனைத்து சமூகப் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தைக் காட்டிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைப்பதாகத் தரவுகள் வெளியான நிலையில் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10.5 உள்ஒதுக்கீடுக்கான அவசரச் சட்டம் இயற்றியது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. உள்ஒதுக்கீடு வழங்கும்போது, அரசுத் தரப்பில் சரியான, நியாயமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்த 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கு ஏற்ப, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% சதவீதத்துக்கும் அதிகமாகவே வன்னியர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையம் சில தரவுகளை வழங்கியுள்ளது. இந்தத் தரவுகளின்படி, வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 10.5 சதவீதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருப்பது தெரியவருகிறது.

தமிழ்நாட்டில் 2018 முதல் 2022 வரை 24,330 மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 4,873 மாணவர்கள். வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2,781. அதாவது, 11.4 சதவீதம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பொறுத்தவரை 2013 முதல் 2022-ம் ஆண்டு வரை 19.5 சதவீத பணியிடங்களை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிரப்பியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

எனவே, பாமக கோரும் 10.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏற்கெனவே அவர்கள் பெற்று வரும் இடங்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பது இந்தத் தரவுகள் மூலம் தெரிய வருகிறது.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா எனக் கேள்வியெழுப்பியுள்ள அவர், அனைத்து சமூகப் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும் திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வாணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?. அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப்பிரிவுக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in