ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை வரும் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி செம்பியம் காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். ஆந்திரத்தில் தலைமறைவாக இருந்ததை அறிந்து, அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடிக்குத் தொடர்பு உள்ளதா, பண உதவியில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பொன்னை பாலுவுக்கு ரூ. 1.5 லட்சம் பணம் கொடுத்ததாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், பொற்கொடி இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை செப்டம்பர் 2 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.