
அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள் சாமி (85) மதுரையில் இன்று (ஜூலை 24) காலமானார்.
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனியில் விவசாயப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் கடந்த 9 ஜூலை, 1940-ல் பிறந்த நம்பெருமாள் சாமி, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும், அமெரிக்காவின் பாஸ்டனில் மருத்துவ மேல்படிப்பையும் நிறைவு செய்தார்.
நாட்டின் முதல் விழித்திரை நிபுணரான (Retina Specialist) இவர், மதுரை எர்ஸ்கைன் மருத்துவமனையில் (தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது) முதலில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக, பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான பிரத்யேகமான அறுவை சிகிச்சை மையத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கினார்.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கிளினிக்கை கடந்த 1967-ல் நம்பெருமாள் சாமி நிறுவினார். பின்னாளில் கோவிந்தப்பா வெங்கடசாமி உள்ளிட்டோருடன் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனையை இவர் தொடங்கினார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, அகில இந்திய கண் மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கடந்த 2010-ம் ஆண்டில், டைம் பத்திரிகை அவரை பட்டியலிட்டது.
இந்நிலையில், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 24) நம்பெருமாள் சாமி காலமானார். தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அவரது உடல் நாளை (ஜூலை 25) எரியூட்டப்படும் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.