
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டைப் பெற்றும், நிகழ்ச்சியைக் காண முடியாமல் போனவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டை வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார். ஆகஸ்ட் 12, 2023 அன்று இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறவிருந்தது. ஆனால், மழை காரணமாக இந்நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்ப்டது. பிறகு, இந்நிகழ்ச்சி செப்டம்பர் 10-க்கு மாற்றப்பட்டது.
ஆனால், செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு பெற்ற பலரால், நிகழ்ச்சியைக் காண முடியாமல் போனது. இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான சூழல் இருந்ததாக அஞ்சப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைவதே பலருக்குச் சவாலாக இருந்தது.
இதனால், ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு பெற்ற பலரால் இதைக் காண முடியாமல் போனது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும், வழக்குக்கான செலவாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மொத்தம் ரூ. 55 ஆயிரத்தை இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.