
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், கோவையைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் கே. அர்ச்சுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (பிப்.25) சோதனை மேற்கொண்டார்கள்.
கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளராகவும், 2021-ல் முதல் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் அம்மன் கே. அர்ச்சுனன். 2016 முதல் 2021 வரை இவர் கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2016 முதல் 2022 வரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அம்மன் அர்ச்சுனன் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் வரப்பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.75 கோடி சொத்து சேர்த்ததாக இவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், அம்மன் அர்ச்சுனன் மீதும் அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (பிப்.24) வழக்கு பதிந்தனர். இதன் தொடர்ச்சியாக, கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்துவதற்காக இன்று (பிப்.25) காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருகை தந்தார்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அம்மன் அர்ச்சுனன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடந்த சோதனையில், அவரது இல்லத்தில் இருந்த சில ஆவணங்களைக் கைப்பற்றி அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த சோதனை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.