
ஜூலை 4-ல் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தவெகவின் முதல் மாநில மாநாடு கடந்தாண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் கடந்த மார்ச் 28-ல் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், தவெக செயற்குழு தொடர்பாக இன்று (ஜூன் 27) அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
`தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், தலைவர் விஜய் தலைமையில், வருகிற ஜூலை 4 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள் / கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.