நிதி அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்

அவர் ஜனரஞ்சகமாகப் பேசியதில் தவறு இல்லை. அமைச்சர்கள் அடங்கிய குழு பொருள்வாரியாகக் கணக்கிட்டு எதற்கு எந்தளவுக்கு வரி விதிக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்கிறார்கள்
நிதி அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்
https://x.com/MSBalajiMSB
1 min read

கோவையில் தொழில் துறையினரைச் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கலந்துரையாடலில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா குழுமத் தலைவர் சீனிவாசன் பேசியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நிதியமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் சீனிவாசன்.

கடந்த செப்.11-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தில் தொழில் துறையினரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இதில் அன்னபூர்ணா குழுமத் தலைவர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

`இனிப்புக்கு 5 சதவீதம், காரத்துக்கு 12 சதவீதம் என வெவ்வேறு விகிதத்தில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. வெறும் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதற்குள் கிரீம் வைத்துக் கொடுத்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் எங்களுடையக் கணினியே குழம்பிவிடுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்களுக்கும் இதனால் குழப்பம் ஏற்படுகிறது’ என்று பேசினார் சீனிவாசன். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று (செப்.12) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், `அவர் (சீனிவாசன்) ஜனரஞ்சகமாக பேசியிருந்தார், அதில் தவறு இல்லை. அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பொருள்வாரியாகக் கணக்கிட்டு எதற்கு எந்தளவுக்கு வரி விதிக்க வேண்டும் என்பதை விரிவாக ஆய்வு செய்கிறார்கள். ஜிஎஸ்டியை மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் பின்பற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்’ என்றார்.

இதைத் தொடர்ந்து கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து அன்னபூர்ணா குழுமத் தலைவர் சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வகையில் பேசும் காணொளி வெளியாகியிருக்கிறது. காணொளியில் சீனிவாசனுக்கு சில அறிவுரைகளை நிர்மலா சீதாராமன் வழங்கியதாகத் தெரிகிறது. ஆனால் காணொளியின் ஆடியோ தெளிவாக இல்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in