தமிழக பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்து அண்ணாமலை வெளியேற்றப்படுவார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் நிர்வாகிகள் சார்பில் சென்னையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இதில் உரையாற்றிய அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அண்ணாமலை பற்றி சொல்ல தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று பேசினார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் அரசியலில் பெரும் பேசுபொருளானது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக கே.பி. முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தலைமைப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் மக்களைச் சந்திக்கவில்லை. மாறாக ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மட்டும் சந்தித்து அரசியல் நடத்தி வருகிறார்.
இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு தற்குறி எப்படி பேசுவாரோ அப்படிதான் அவருடைய ஒவ்வொரு கருத்தும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. ஜெயலலிதாவைப் பற்றி கருத்து சொல்லும்போது என்னுடைய மனைவிகூட ஆளுமைமிக்கவர் என்று சொன்னவர் அண்ணாமலை.
இப்படி முன்னுக்குப்பின் முரணாக கருத்துகளைச் சொல்லக்கூடிய ஒரு தற்குறி, இந்தத் தற்குறி ஓர் ஆளுமைமிக்க தலைவரைப் பற்றி விமர்சனம் செய்ய எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.
2024-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களுக்கு மேல் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றார். மேலும், அதிமுக காணாமல் போகும் என்றும் சொன்னார். ஆனால், தேர்தலில் ஒரு இடத்திலாவது பாஜக வெற்றி பெற்றுள்ளதா?
ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்ற கன்னியாகுமரி தொகுதியிலும் அண்ணாமலை தலைமைப் பொறுப்பேற்ற பிறகு தோல்வியடைந்துள்ளது. வெற்றி பெற்ற தொகுதியிலும் தோற்கக்கூடிய ஒரு தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர் அண்ணாமலை.
தமிழகத்தில் தான்தோன்றித் தனமாக பேசுவதினால் தலைமைப் பொறுப்பு நமக்குத் தொடர்ந்து இருக்காது என்ற அச்சத்தில், இருக்கும் வரை ஏதாவது கருத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கலாம் என்று சொல்லி வருகிறார். நிச்சயமாக தலைமை உணர்ந்து தலைமைப் பொறுப்பிலிருந்து இவர் விரைவில் வெளியேற்றப்படுவார்" என்றார் கே.பி. முனுசாமி
இதனிடையே, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும், வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம்" என்றார்.