பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு நான் பொறுப்பில்லை: அண்ணாமலை | Annamalai |

சத்தியப் பிரமாணத்திற்கு எதிராக பிரதமர் சொல்லாத விஷயத்தை முதலமைச்சர் கூறிக் கொண்டிருக்கிறார்...
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)ANI
2 min read

பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒன்றிணைந்ததற்கு நான் பொறுப்பில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

”பசும்பொன்னில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்தித்தற்கு நான் பொறுப்பில்லை. அதற்கான விளக்கத்தை நான் அளித்துவிடுகிறேன். இல்லாவிட்டால் நான் தான் அந்த மூவரையும் சேர்த்தேனா என்று ஒருவர் எழுதுவார். நீங்கள் பசும்பொன்னுக்குப் போகவில்லையே, அவர்களைப் பின்னாலிருந்து இயக்குகிறீர்களா என்று ஒருவர் எழுதுவார். என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. நான் பேச ஆரம்பித்தால் பல விஷயங்களைப் பேசிவிடுவேன். ஆனால் நான் பேசக்கூடாது. யூகங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதற்காக நான் இதனைச் சொல்கிறேன். நான் எதற்கும் பொறுப்பில்லை. எல்லாம் தானாக நடக்கிறது. அப்படி இருக்கும்போதே எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம் என்று பேசுகிறார்கள். இன்றுநான் அதிமுகவைப் பற்றிப் பேசாமல் இருக்கிறேன். ஆனாலும் இன்றும் அதிமுகவைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் என்னைட் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அமித் ஷாவுக்கு நான் கொடுக்க வாக்குக்காக நான் கட்டுப்பட்டு இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. நான் அதற்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறேன்.

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை நான் விமானத்தில்தான் இரண்டு முறை சந்தித்தேன். போனமுறை சந்தித்தபோதுகூட அவர் உறங்கிவிட்டார். நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. அவருடைய அரசியல் வாழ்க்கை அவருடையது. என்னுடைய அரசியல் வாழ்க்கை என்னுடையது. நான் எதையும் நேரடியாகப் பேசுபவன். ஆனால் சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்.

அமித் ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொடுக்கும் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன். பிடித்திருந்தால் இருக்கப் போறேன். இல்லையென்றால் கிளம்பப் போகிறேன். எனக்குப் பிடித்த விவசாயத்தை பார்த்துவிட்டு இருக்கப் போகிறேன். நான் 20 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிடவில்லை. 60 வயது வரை இருப்பேன் என்று சொல்லவும் இல்லை. எங்கள் குடும்பத்தில் நான் முதல் தலைமுறை அரசியல்வாதி. என் பின்புலத்திற்கு நான் தனிக்கட்சி தொடங்கினால் நடத்த முடியுமா? எனக்கு என் உயரம் தெரியும். பிரதமர் மோடியின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இம்மியளவும் குறைந்துவிடவில்லை.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கிடையது. ஒருவேளை அப்படிச் சொன்னால், அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் அமர்ந்துகொள்ள வேண்டியதுதான். இதை நடத்த விடமாட்டோம் என்று சொல்பவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுகிறார்கள். அவர்களை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதை நான் சொல்லவில்லை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

பிஹார் மக்களை திமுக தலைவர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் பிரதமர் பிஹாரில் தேர்தல் பிரசாரத்தின்போது சொன்ன வார்த்தை. இதற்கான ஆதாரம் சமூக ஊடகங்களில் இருக்கிறது. அதில் தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, பொன்முடி போன்றவர்கள் இழிவாகப் பேசியதைத்தான் பிரதமர் குறிப்பிட்டார். இன்று ரூ. 888 கோடி ஊழல் நடந்திருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல் துறையில் ஆதாரத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரிக்கும்போது கூட அதைப்பற்றி வாயைத் திறக்காத முதலமைச்சர் திசை திருப்புவதற்காக, பிரதமர் சொல்லாத விஷயத்தைச் சொன்னதாகப் பொய் பேசுகிறார். முதலமைச்சரின் நடவடிக்கைகள் சத்தியபிரமாணத்திற்கு எதிராக இருக்கின்றன. அவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

Summary

BJP former president Annamalai has stated that he is not responsible for the unification of O. Panneerselvam, TTV Dhinakaran, and Sengottaiyan in Pasumpon.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in