
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன்கள் படித்த இரு மொழிகள் குறித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளதன் மூலம், இருவருக்குமிடையிலான மோதல் தொடர்கிறது.
மதுரையில் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "எங்கேயும் வெற்றி பெறாமல் முழுமையாகத் தோல்வியடைந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, வெற்றியடைந்த திட்டத்துக்கு மாற்றாக தோல்வியடைந்த திட்டத்தைச் செயல்படுத்துமாறு கூறினால், அறிவு இருப்பவர்கள் யாராவது இதை ஏற்றுக்கொள்வார்களா?" என்று மும்மொழிக் கொள்கை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பிடிஆரின் மகன் எங்கு படிக்கிறார்? பிடிஆரின் மகன் மூன்று மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால், உங்களுக்கு அறிவு இல்லை என்று தானே அர்த்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா அமைச்சர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எல்லோரும் மூன்று மொழிகளில் தான் படிக்கிறார்கள்" என்றார் அண்ணாமலை.
இதைத் தொடர்ந்து, மதுரையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "34 பேருடைய (அமைச்சர்கள்) மகன், மகள்கள் எங்கே படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித் திட்டம் என்பதுதான் முக்கியம். என் இரு மகன்களும் எல்கேஜி முதல் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை, இரட்டை மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள்" என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகன்கள் படித்த இருமொழிகள் குறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,
முதல் மொழி: ஆங்கிலம்
இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.