
லண்டன் சென்ற அண்ணாமலை நவம்பர் 28 அன்று சென்னை திரும்புகிறார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் படிப்பைப் பயின்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28 அன்று சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்ட அண்ணாமலை, அங்கிருந்தபடியே அரசியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக கட்சிப் பணிகளைக் கவனிக்க, பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச அரசியல் படிப்பை நிறைவு செய்யும் அண்ணாமலை வரும் நவம்பர் 28 அன்று சென்னை திரும்புகிறார். டிசம்பர் 1 அன்று கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை லண்டன் சென்றிருந்த இடைப்பட்ட காலத்தில் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்ப்பு சக்தியாக விஜய் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இப்படியான திருப்புமுனைமிக்க அரசியல் சூழல்களின்போது அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் தமிழ்நாடு திரும்புவது அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.