கருணாநிதி நினைவிடத்தில் கும்பிடு போடுவதைப் பெருமையாகவே கருதுவேன், சிறுமையாகக் கருத மாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவின்போது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் போதாது என்ற வகையில் விமர்சனம் வைத்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறு இல்லை என அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
"கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா மாநில அரசு நடத்தி மத்திய அரசு பங்கேற்ற விழா. கலைஞர் கருணாநிதிக்கு 2024-ல் 100-வது ஆண்டு வரும்போது, நாணயத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் நடைபெறும் விழா ஓர் அரசு விழா. மத்திய அரசு சார்பாக ஒருவர் பங்கேற்கும்போது அது மத்திய அரசு விழாவாகவும் உள்ளது, மாநில அரசு விழாவாகவும் உள்ளது. செலவு அனைத்தையும் மாநில அரசு ஏற்கிறது. காரணம், உரிமை கோரியது மாநில அரசு. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. விருந்தினராக வருமாறு மத்திய அரசை மாநில அரசு அழைக்கிறது. ராஜ்நாத் சிங் பாஜக சார்பில் இல்லாமல் மத்திய அரசு சார்பாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
கலைஞர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறு இல்லை. ஒருவரது காலில் விழுவதுதான் தவறு. சசிகலாவுக்கு அருகே ஆர்.பி. உதயகுமார் கையைக் கட்டிக்கொண்டும், வாயில் கைவைத்தபடியும் இருப்பார். காலில் சென்று விழுவார்.
இதைவிட கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தவர். அவர் பெரிய மனிதர், நான் ஒரு கட்சியின் தொண்டன். சித்தாந்த ரீதியில் எங்களுடையக் கட்சிக்குப் பெரிய வித்தியாசங்கள் இருந்தாலும், தமிழகத்துக்கு அவர் செய்திருக்கக் கூடிய பணிக்காக ஒரு சாதாரண விவசாயின் மகனாக இருக்கக் கூடிய அண்ணாமலை, கருணாநிதியின் நினைவிடத்தில் ஒரு கும்பிடு போட்டால் அதைப் பெருமையாகவே கருதுவேன், சிறுமையாகக் கருதவில்லை.
மேலும், வாஜ்பாயுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்துள்ளார்கள். இதே கலைஞர் கருணாநிதி, பாஜக பற்றி தமிழகத்தில் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. உடன்பிறப்புகள் மக்களிடம் சென்று இதுகுறித்து பேச வேண்டும் என்றார் அவர். கருணாநிதிதான் இதைச் சொன்னார். நான் இதில் அரசியல் பேசவில்லை.
அவர் அரசியல் அனுபவம் கூட என் வயது கிடையாது. இவருக்கு 80 ஆண்டுகள் அரசியல் அனுபவம். 50 ஆண்டுகாலம் நேரடி அரசியல். 30 ஆண்டுகள் நேரடியாக திரைத் துறையில் எழுதியவர்.
எத்தனையோ இடங்களில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக வைத்திருந்தாலும், நூறாவது ஆண்டில் அந்த விழாவில் மரியாதை செலுத்துவதைக் கொச்சைப்படுத்த நினைத்தால் அது தவறு. அறிஞர் அண்ணா நினைவிடத்துக்குச் சென்று கும்பிடு போட்டு வந்துள்ளேன். காரணம், முதல்வராக இருந்திருக்கிறார். கடவுளைப் பொறுத்தவரை எங்களுக்கும் அறிஞர் அண்ணாதுரைக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை முன்வைக்கிறோம். ஆனால், தமிழகத்துக்காக பணி செய்தவர்களைப் பார்க்கக்கூடாது என்றால் எப்படி சரியாகும்?. ஜெயலலிதாவுக்கும் மரியாதை செய்வேன். எம்ஜிஆரைப் பற்றி சொல்லவே வேண்டாம், அவர் ஒரு மகான். தமிழகத்தில் இன்று இவற்றையெல்லாம் ஒரு குற்றமாக ஆர்.பி. உதயகுமார் கூறினால், நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை" என்றார் அண்ணாமலை.