
மும்மொழிக் கொள்கையை அறிவு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மும்மொழிக் கொள்கை குறித்து பேசுகையில், எங்கேயும் வெற்றி பெறாமல் முழுமையாகத் தோல்வியடைந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, வெற்றியடைந்த திட்டத்துக்கு மாற்றாக தோல்வியடைந்த திட்டத்தைச் செயல்படுத்துமாறு கூறினால், அறிவு இருப்பவர்கள் யாராவது இதை ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியதாவது:
"பிடிஆரின் மகன் எங்கு படிக்கிறார்? பிடிஆரின் மகன் மூன்று மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால், உங்களுக்கு அறிவு இல்லை என்று தானே அர்த்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா அமைச்சர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எல்லோரும் மூன்று மொழிகளில் தான் படிக்கிறார்கள்" என்றார் அண்ணாமலை.