என் மீது கை வையுங்கள்: அண்ணாமலை சவால்

"தமிழ்நாட்டில் அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்”.
அண்ணாமலை
அண்ணாமலை

எஸ்.பி. வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது என அண்ணாமலை பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “அண்ணாமலையால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது” என பேசினார்.

இதைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “எஸ்.பி. வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்கட்சி பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது” என பேசியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்.பி. வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்கட்சி பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. 2019-ல் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதே அவர்களால் ஒரு சீட்டைக் கூட வெல்ல முடியவில்லை. இந்த தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட்டை இழந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு, கூட்டணியில் இல்லாதபோது ஒரு பேச்சு என்கிற சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் விரும்பவில்லை. அதிமுக 3 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறார்கள். கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்துவிட்டனர். இந்த விரக்தியில் வேலுமணி பேசுகிறார். நம்முடைய காலம் வரும். நாம் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறோம். அதேபோல ஆட்டை கொடூரமாக வெட்டுவதைப் பார்க்க கொடுமையாக உள்ளது. அப்படி திமுகவினருக்கு அவ்வளவு கோவம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் எங்கு இருக்கேன் என்பது அனைவருக்கும் தெரியும். 2026-ல் முதல்முறையாக தமிழ்நாடு அரசியலில் முழுமையாக கூட்டணி ஆட்சியை நாம் பார்க்கப்போகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in