அண்ணாமலை
அண்ணாமலை@annamalai.k

கொங்கு மண்டலம் யாருக்கு என்று பார்த்துவிடலாம்: அண்ணாமலை சவால்

"தமிழ்நாட்டின் 8.5 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கு மோடி கேரண்டி கொடுப்பார்".
Published on

ஜூன் 4 அன்று கொங்கு மண்டலம் யாருக்கு என்று பார்த்துவிடலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் கோவையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஊழல் பல்கலைகழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக - பாஜக இடையே தான் போட்டி. இரண்டு கட்சிகளும் தற்போது ஆட்சியில் உள்ளன. அதனால்தான் பிரதமர் மோடி மேடைகளில் திமுகவை பற்றி மட்டும் பேசிவிட்டு அதிமுகவைப் பற்றி பேசாமல் இருக்கிறார். இபிஎஸ்-ஐ ரோடு ஷோ நடத்த சொல்லுங்கள், அதற்கு எத்தனை பேர் வருவார்கள்? அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. மோடி நடத்திய ரோடு ஷோவை இபிஎஸ் நடத்தலாமே? அப்படி நடத்தினால் மக்கள் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

தமிழ்நாட்டின் 8.5 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கு மோடி கேரண்டி கொடுப்பார். திமுக, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள தனது தேர்தல் விளம்பரத்துக்கு மட்டும் ரூ. 7 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. ஜூன் 4 அன்று கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். ஊழல் பல்கலைகழகத்துக்கு வேந்தராக மோடி இருப்பார் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், ஊழல் பல்கலைகழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in