`எல்லோருமே உழைத்து பதவிக்கு வந்தவர்கள், ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்று (ஆகஸ்ட் 25) சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவர் பேசியவை பின்வருமாறு:
`ஏதோ மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் நாணயம் வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் அவர் (அண்ணாமலை) பேசியிருக்கிறார். அது சிறுபிள்ளைத்தனமானது. 1984-ல் தான் இப்போது இருக்கின்ற பாஜக தலைவர் பிறந்திருக்கிறார். இவர் பிறப்பதற்கு முன்பே எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றி நாட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்.
அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி என்று அவர் பேசியிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்களே அப்போது இது தெரியவில்லையா? 2021-ல் எங்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போய்விட்டார். மாநிலங்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற அதிமுகவின் தயவு அப்போது தேவைப்பட்டது.
இப்போது இவர்களுடனான கூட்டணி உறவு முறிந்தபிறகு அதிமுக கெட்ட கட்சியாகத் தெரிகிறது. இப்போது இருக்கும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்? அவர் ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக மத்தியில் ஆட்சியமைத்ததும் 500 நாட்களில் 100 திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார். இப்போது எத்தனை திட்டங்கள் வந்துள்ளன? அவர் பேசுவது அனைத்துமே பொய். 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எயிம்ஸ் மருத்தவமனைத் திட்டம் இன்று வரை தொடங்கப்படவில்லை.
எல்லோருமே உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமல் பதவிக்கு வந்த ஒரே தலைவர் தமிழக பாஜக தலைவர் மட்டுமே. பாஜகவுக்கு அவர் என்ன உழைப்பைக் கொடுத்திருக்கிறார்? ஏதோ ஒரு வழியில் தலைவர் பதவியைப் பெற்றுவிட்டு அதை வைத்து தலைகால்புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். அவருக்கான ஒரே முதலீடு வாய் மட்டுமே’.