
ரஜினியை மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். அதை அரசியலில் இழுத்து விட வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டதில் இருந்து அண்ணாமலை பாஜக சார்ந்த நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். மறுபுறம், அரசியல் களத்தில் உள்ள முக்கிய தலைவர்களுடனான அவரது சந்திப்பு அரசியலில் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரைச் சந்தித்தார் அண்ணாமலை. கூடவே ரஜினியையும்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஜினியைச் சந்தித்தது குறித்து அண்ணாமலை கூறியதாவது:
”நான் ரஜினியை அடிக்கடி பார்ப்பேன். மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பேன். அதை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதில்லை. ரஜினி எனக்குத் தலைவர். ஒரு சினிமா நடிகராகப் பார்க்கவில்லை. அவர் எனக்கு ஆத்மார்த்தமான நட்பு, ஆன்மீக அடிப்படையில் முதலில் இருந்து பழக்கமுள்ளவர். அவரைச் சமீபத்தில் சந்தித்தேன். அவர் ஆன்மீகம் பற்றி பல விஷயங்கள் சொல்வார், யோகா போகச் சொல்வார். அவரை ஒரு குருவாகப் பார்க்கிறேன். அவரை அரசியல் களத்திற்கு இழுத்து விட வேண்டாம்” என்று கூறினார்.