கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் மற்றும் இவருடைய தந்தை மரணம் சந்தேகத்தைக் கிளப்புவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் சிவராமன் என்பவர் காவல் துறையினர் கைது செய்வதற்கு முன்பே எலி மருந்து சாப்பிட்டதாகவும், இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டன. இதில் சிகிச்சைப் பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவருடைய தந்தையும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
இருவருடைய அடுத்தடுத்த மரணம் சந்தேகத்தைக் கிளப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
போலி என்சிசி பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி என்சிசி முகாம்கள் நடத்தி அவர்களுக்கு என்சிசி சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி என்சிசி பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது:
"கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.