
ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி கோமியத்தில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக வகுப்பறையில் பேசவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமை தெரிவித்துள்ளார்.
கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாக ஐஐடி சென்னை இயக்குநர் வீ. காமகோடி கடந்த வாரம் பேசியது சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (ஜன.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோமியத்தில் மருத்துவக் குணங்கள் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவதாகவும் விளக்கமளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கோமியம் என்பது ஆயுர்வேதம் சார்ந்தது. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கோமியத்திற்கு உள்ளது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே வீட்டிற்கு முன்பு கோமியம் தெளிப்பது வழக்கமாக உள்ளது. ஆராய்ச்சியில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
கோமியம் குறித்த அடுத்தடுத்த கருத்துகள் பெரும் பேசுபொருளான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கோமியம் பற்றிய சர்ச்சைகள் குறித்து அவர் கூறியதாவது:
"மாட்டின் சிறுநீர் எனப்படும் கோமியம் மருந்து என்று ஆயுர்வேதத்தில் உள்ளது. குறிப்பாக, அமிர்த நீர் என்று கோமியம் குறிப்பிடப்படுகிறது.
ஐஐடி இயக்குநரைப் பொறுத்தவரை, அவர் நல்ல மனிதர். கணினி துறையில் அவர் பெரிய நிபுணர். வகுப்பறையில் அவர் பேசியிருந்தால், கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. ஏதோவொரு தனியார் இடத்தில்தான் அவர் பேசுகிறார்.
அது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும், சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. அந்தக் கருத்தை ஆதரிக்க விரும்பவில்லை. காரணம், அவர் வகுப்பறையில் அல்லது ஐஐடி இயக்குநர் என்கிற அதிகாரபூர்வ பதவியில் இருந்தவராகப் பேசியிருந்தால், நான் கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே, இந்த விவகாரத்தை விட்டுவிடலாம் என்பது என் பார்வை.
நான் பசுவை நம்புகிறேன். எனக்கு நம்பிக்கை உள்ளது. பசுவை நான் புனிதமாகப் போற்றுகிறேன். இது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பசுவைக் கடவுளாகப் பார்க்கக்கூடிய மனிதன் நான். அதை நான் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்கிறேன். பொதுவெளியில் ஒரு கருத்தைத் திணிக்க வேண்டாம் என்பது என் கருத்து.
தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர். அவர் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்து பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை" என்றார் அண்ணாமலை.
முன்னதாக, டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என்றார்.