பாஜக மாவட்டத் தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், காவல் துறையை திமுக தனது அரசியலுக்காகப் பயன்படுத்தி வருவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
பாஜக மாவட்டத் தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்
1 min read

வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட பெரவள்ளூரில் கடந்த 1 அன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கபிலன் கலந்துகொண்டு பேசினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவருடையக் குடும்பத்தினர் பற்றி கபிலன் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கபிலனை இன்று காலை வியாசர்பாடியில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளது.

கைது நடவடிக்கை குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் கபிலன் அவர்களைத் தமிழகக் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம்" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in