சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்காக ஒதுக்கிய ரூ.309 கோடி எங்கே?: அண்ணாமலை கேள்வி | Annamalai |

நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும்...
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)ANI
1 min read

சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி கோவை வரவுள்ள நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

“தமிழ்நாடு நெல் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ. 309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ரூ. 309 கோடி நிதி?

நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ரூ.160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பு.

கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல. தமிழ்நாட்டு விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு?.” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Former BJP state president Annamalai has questioned Chief Minister Stalin about where the Rs. 309 crore allocated for the construction of storage warehouses went.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in