
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - அன்னபூர்ணா சீனிவாசன் இடையே நடந்த உரையாடல் தொடர்பான காணொளி வெளியானதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் தொழில் துறையினரைச் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கலந்துரையாடலில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா குழுமத் தலைவர் சீனிவாசன் பேசியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நிதியமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் சீனிவாசன். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில் அன்னபூர்ணா சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இது குறித்த பதிவில், “நிதியமைச்சருக்கும் வணிக நிறுவனருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடலைப் பொதுவெளியில் பகிர்ந்த பாஜகவினரின் செயலுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளரான சீனிவாசனிடம் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்காக வருத்தம் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டின் வணிகச் சமூகத்தின் தூணாக அன்னபூர்ணா சீனிவாசன் உள்ளார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.”