ஏழை, எளிய விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக அரசு.
அண்ணாமலை
அண்ணாமலைANI
1 min read

எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காகப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய விவசாய்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பயிர்க் கடன்கள் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (பிப்.6) அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

`கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 33-ல் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை பயிர்க்கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை என்பதால் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது எனவும், வாங்கிய கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் ஆணவமாகப் பேசினார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்தது முதல் 31.12.2023 வரை, ரூ. 35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அப்படி இருந்தும், கடந்த 31.03.2024 வரை நிலுவையில் இருக்கும் கூட்டுறவு பயிர்க் கடன் ரூ. 19,008 கோடி மட்டும்தான் என்றால், இத்தனை கடினமான காலங்களிலும், சிறு குறு விவசாயிகள் தங்கள் கடனை முறையாகத் திரும்பச் செலுத்தி வருகிறார்கள் என்பதே அர்த்தம்.

வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக. பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in