ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சரியான திசையில் செல்கிறதா?: அண்ணாமலை கேள்வி

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
அண்ணாமலை
அண்ணாமலை ANI
1 min read

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 பேரில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சரியான திசையில் செல்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த 11 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவரும் ஒருவர். கொலை நடந்த விதம் குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடம் என்பவரைக் காவல் துறையினர் மாதவரம் அருகே அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, திருவேங்கடம் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பிக்க முயற்சித்த நிலையில், காவல் துறையினர் இவரைத் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இதில் திருவேங்கடம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்”.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in