
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 28-ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த உயர் நீதிமன்ற அமர்வின் வழிகாட்டுதலின்படி, வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் மீதான முதல்கட்ட குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த பிப் 24-ல் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்பிறகு, இந்த வழக்கு மீதான விசாரணை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவுபெற்று வரும் மே 28-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.