
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை பயின்று வந்த மாணவி ஒருவரை, பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கடந்தாண்டு டிச.23-ம் தேதி இரவில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்து அதை அவரது கைபேசியில் காணொளியாகப் பதவி செய்ததாக, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில், கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவர் டிச.24-ல் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
அதன்பிறகு ஞானசேகரன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட பெண் உள்பட 29 பேர் சாட்சியம் அளித்து விசாரணை நிறைவுபெற்ற பிறகு மே 28-ல் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்து, அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஜெயந்தி, `இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, சம்பவத்தின்போது அவரது கைப்பேசி ஏரோ ஃப்ளேன் மோடில் இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம், மதுரை மாவட்டம் மேலூர் அ. வல்லாளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
`அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞனசேகரன் செல்போன் விவரங்கள் என்னிடம் உள்ளன. அதை விரைவில் வெளியிடுவோம். ஞானசேகரன் சம்பவம் நடந்த போது 23-ம் தேதி, 24-ம் தேதி யாரிடம் பேசினார் என்ற விவரம் உள்ளது’ என்றார்.
இதே போன்ற கருத்தை, நடப்பு ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு காணொளியிலும் அண்ணாமலை பேசியிருந்தார்.
இந்நிலையில், ஞானசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை அண்ணாமலை சிறப்பு புலன் விசாரணை குழுவிடம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக அவரை விசாரிக்க உத்தரவிடுமாறு வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.