
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாட்டில் லஞ்சம் பெற்ற வழக்கில் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வு.
கடந்த டிசம்பர் மாதம், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியைக் கைது செய்தனர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர். இதை அடுத்து அங்கித் திவாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
அங்கித் திவாரியும் அவருடன் பணிபுரியும் பிற அமலாக்கத்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ள நபர்களை மிரட்டி அவர்கள் மீது உள்ள வழக்குகளை முடிக்க லஞ்சம் பெற்று வந்தனர் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் அங்கித் திவாரி. ஆனால் அவரின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்தார் அங்கித் திவாரி.
அங்கித் திவாரியின் மனுவை ஏற்று அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம். ஆனால் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள சாட்சிகளைக் கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ கூடாது என்று அங்கித் திவாரிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் முன் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று அங்கித் திவாரிக்கு நிபந்தனை விதித்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் அங்கித் திவாரி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையை சிபிஐ வசம் மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி. ராஜூ ஆஜராகாத காரணத்தால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.