ஒரே நாடு ஒரே தேர்தல்: ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வைத்த கோரிக்கை

"கலைஞர் கருணாநிதியின் கனவை தான் மத்திய அரசு நனவாக்குகிறது."
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வைத்த கோரிக்கை
படம்: https://www.youtube.com/@JanaSenaParty
2 min read

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்புடைய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார்.

பவன் கல்யாண் பேசியதாவது:

"நான் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். சென்னையில் வளர்ந்திருக்கிறேன். தமிழ்நாட்டை விட்டுச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ்நாட்டை நான் விட்டுச்சென்றாலும், தமிழ்நாடு என்னைவிட்டுச் செல்லவில்லை. காரணம், தமிழ்நாடு என் மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகமானது.

திருவள்ளூவர், சித்தர்கள் பூமி தமிழ்நாடு. நான் வணங்கும் தமிழ்க் கடவுள் முருகனின் பூமி இது. பாரதியாருடைய பூமி. கோயில்கள் பூமி. எனக்குப் பிடித்த எம்ஜிஆர் வாழ்ந்த பூமி. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பூமி.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு இது. இதுபற்றி நிறைய பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. தவறான புரிதல்கள் உருவாக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் புதிதல்ல.

1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்று வந்தன. இந்த சுழற்சி உடைந்த பிறகு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி. சோகம் என்னவென்றால், இன்று அவர்கள் (திமுக) தான் இதை எதிர்க்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பவர்கள், நெஞ்சுக்கு நீதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான கலைஞர் கருணாநிதியின் வாதங்களை வாசிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் முறையைத் திரும்ப கொண்டு வருவது தொடர்பாக கமிட்டி அமைக்க வேண்டும் என கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார். அது தான் இன்று அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் கனவை தான் மத்திய அரசு நனவாக்குகிறது. அவருடைய முன்மொழிவை அமல்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால், தனது தந்தை முன்மொழிந்ததை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்ப்பது வியப்பளிக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டு மக்களிம் விருப்பம். ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் வாதிடுகின்ன. இது உண்மையெனில், மாநில உரிமைகளுக்காகப் போராடியவராகப் பார்க்கப்படும் கலைஞர் கருணாநிதி எதற்காக ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தார். இதை அவர் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகப் பார்க்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்ல. பொருளாதார, நிர்வாக, ஆட்சி சீர்திருத்தம். முக்கியமாக, நம் தமிழ்நாட்டுக்குத் தேவையான சீர்திருத்தம். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். இந்தியர்களாக ஒன்றிணைவோம், ஏற்றுக்கொள்வோம்" என்றார் பவன் கல்யாண்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in