அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவும்: அன்புமணியின் விமர்சனமும்!

தவறு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவும்: அன்புமணியின் விமர்சனமும்!
1 min read

தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்களை நியமிக்க முன்பு வெளியிட்ட அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றதை அடுத்து, செய்த தவறை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்க பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சார்பில் முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என நேற்று (நவ.21) மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/மதிப்பூதியத்தின் அடிப்படையில் மட்டும்தான் இனி நியமிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டுமே குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது.

அதன் தவறு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும். குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in