தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும் அதிமுகவும் இணைந்து களமிறங்குகின்றன. இதில் அன்புமணி தரப்பு பாமக இன்று இணைந்த்து. இது தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதிமுக - பாமக இயற்கையான கூட்டணி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில், ஏற்கனவே அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை அமைத்துள்ளது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேர்க்கப்படும் சேருவார்கள். எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பிய வண்ணம் இந்தக் கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். அதேபோல பாமகவிலும் அவர்களுடைய நிர்வாகிகள், தொண்டர்கள், தலைவர்கள் விரும்பியவாறு இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி
நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தின் அடிப்படையிலே, ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கின்ற ஒரு அரசாக அமைய, எங்களுடைய கூட்டணி 234 இடங்களில் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அதற்கு எங்கள் கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக, பாமக மூன்றும் இணைந்து, இரவு பகல் பாராமல், தேனீக்கள் போன்று போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
பெரும் வெற்றியைப் பார்ப்போம்
தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: “இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருக்கிறது. எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எல்லாம் அவர்களுக்கு எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கின்றோம். இது வலுவான கூட்டணி. எங்களுடைய நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சி, அரசு ஊழியர்கள் மீனவர்கள் மாணவர்கள் தொழிலாளர்கள் அத்தனை உழைக்கின்ற வர்க்கத்திற்கு எதிரான ஒரு ஆட்சி, ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கின்றோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்க இருக்கின்றோம்.
மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்
காரணம், சமீபத்தில் கூட 100 நாள்கள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது அங்கே கிராமத்திலிருந்து நகரம் வரை திமுக மீது மிகுந்த கோபத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார்.
Anbumani's side of the PMK joined the AIADMK-led National Democratic Alliance in Tamil Nadu.