
பாமக தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான முரண்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அன்புமணி சார்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவுக்குத் தடை கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அன்புமணியின் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் தான் ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக்குழு திட்டமிட்டப்படி விழுப்புரத்தில் இன்று கூடியது. ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமகவின் நிறுவனராகவும் தலைவராகவும் ராமதாஸே தொடர்வார் என முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்டவற்றுக்கு ராமதாஸுக்கே அதிகாரம் வழங்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக நிறுவனரின் எழுத்துபூர்வ ஒப்புதல் மற்றும் நிறுவனரின் முன்னிலையிலேயே பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என ராமதாஸ் முன்னிலையில் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், பாமகவின் முழு அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராமதாஸ் முடிவெடுத்திருப்பது தெரிகிறது.
மேலும், இந்தப் பொதுக்குழுவில் பாமக சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜி.கே. மணி சார்பில் இந்த அறிக்கையானது பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டது.
ராமதாஸை அவமதித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது, ராமதாஸிடம் தகவல் தெரிவிக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டியது, ராமதாஸின் நியமனங்கள் அனைத்தும் செல்லும் என மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்தக் குழு பரிந்துரைத்தது.
இறுதியாகப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்கள் விரும்பும் நல்ல கூட்டணி அமையும் என்று கூறினார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் வரை போராட்டம் தொடரும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி பேசினார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின்படி, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்புமணி குறித்து எதுவும் பேசாமல் உரையை முடித்துக் கொண்டார் ராமதாஸ்.
Ramadoss | PMK | Anbumani Ramadoss | PMK General Body Meeting | PMK General Body Meet |