காலை உணவு தயாரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா?: அன்புமணி கண்டனம்

மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவு தயாரிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அவற்றை கொண்டு சென்று சேர்க்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்ANI
1 min read

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இன்று (ஜன.27) காலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

`சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பரிமாறப்படும் காலை உணவைத் தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மாணவர்களின் நலன்களுக்கு எதிரான திமுக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கான காலை உணவை அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் தற்போது மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர்.

இந்தத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சத்துணவு தயாரிக்கப்படுவதைப் போல, பள்ளிகளிலேயே காலை உணவையும் தயாரித்து வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக இந்தப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சென்னை பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவு தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உணவைக் கொண்டு சென்று சேர்க்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதனால் குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாக உணவு கிடைக்காத நிலை உருவாகும். இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தை சிதைத்துவிடும்.

காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023 நவம்பரில் சென்னை மாநகராட்சி முடிவு செய்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அது கைவிடப்பட்டிருந்தது. ஏற்கனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மீண்டும் சென்னை மாநகராட்சி செயல்படுத்தத் துடிப்பதன் நோக்கம் தெரியவில்லை.

காலை உணவு தயாரிப்பை தனியாருக்கு வழங்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவுத் திட்டத்திற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடங்களில் காலை உணவை தயாரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in