தேசியக் கல்விக் கொள்கை: தர்மேந்திர பிரதான் கேள்விகளுக்கு அன்பில் மகேஸ் பதில்

"தமிழ்நாடு ஏற்கெனவே தன்னுடைய சொந்த முன்னெடுப்புகளின் வாயிலாக, தேசியக் கல்விக் கொள்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு அம்சங்களையும் செயல்படுத்தி வருகிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/Anbil_Mahesh
2 min read

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையில் இணைய மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 4 கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

"1930-கள் மற்றும் 60-களின் வரலாற்று இயக்கங்களில் வேரூன்றிய இருமொழிக் கொள்கையின் வாயிலாகத் தமிழ்நாடு தன்னுடைய மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது. தமிழை எங்களுடைய அடையாளத்தின் தூணாக ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் எதிர்காலத் தலைமுறையினர் ஆங்கிலப் புலமை பெறுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்" என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கேள்விகளுக்கும் தனித்தனியே பதிலளித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் கேள்வி 1: தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?

அன்பில் மகேஸ் பதில்: எங்களுடையக் கொள்கை எப்போதும் தமிழை அடிப்படையாகக் கொண்டு, அனைத்தையும் உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளித்துவரும் அதே வேளையில், மாணவர்களுடைய ஆங்கில அறிவையும் மேம்படுத்துகிறது.

தர்மேந்திர பிரதான் கேள்வி 2: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்த எதிர்க்கிறீர்களா?

அன்பில் மகேஸ் பதில்: எங்களுடைய முதல்வர் மு.க. ஸ்டாலின், வேலைவாய்ப்பில் சம நிலையினை உருவாக்கிட போட்டித் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

தர்மேந்திர பிரதான் கேள்வி 3: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடங்கள் தயாராவதை எதிர்க்கிறீர்களா?

அன்பில் மகேஸ் பதில்: பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பப் பாடங்களைக்கூட மொழிபெயர்த்து, தமிழில் கற்றல் கருவிகளை வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னணி வகித்து வருகிறது.

தர்மேந்திர பிரதான் கேள்வி 4: முழுமையான, சமநிலையான, எதிர்காலத்துக்கேற்ப, அனைத்தையும் உள்ளடக்கிய கட்டமைப்புகளைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?

அன்பில் மகேஸ் பதில்: தமிழ்நாட்டின் கொள்கைகள் ஏற்கெனவே முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, தமிழ்ப் புதல்வன், எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களின் வாயிலாக முழுமையான மற்றும் உள்ளடக்கிய பண்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவை, தேசியக் கல்விக் கொள்கைக்கு முந்தையவை மற்றும் அதன் இலக்குகளுடன் பொருந்திச்செல்பவை.

இறுதியாக, தமிழ்நாடு ஏற்கெனவே தன்னுடைய சொந்த முன்னெடுப்புகளின் வாயிலாக, தேசியக் கல்விக் கொள்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு அம்சங்களையும் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், மும்மொழிக் கொள்கை, பாடத்திட்ட மாற்றங்கள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களைத்தான் நாங்கள் ஆட்சேபிக்கிறோம். சமக்ர சிக்‌ஷா நிதியைத் தேசிய கல்விக் கொள்கை உடன்பாட்டுடன் இணைப்பது, கல்வி தொடர்பாக மாநில அரசுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள சுயாட்சியை மீறுவதாகும்.

எனவே, தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட நிபந்தனைகள் இல்லாமல் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்" என்றார் அன்பில் மகேஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in