புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால் நிதி என மத்திய அரசு அழுத்தம்: அன்பில் மகேஸ்

அமெரிக்கா புறப்படும் முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/Anbil_Mahesh
1 min read

புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால் நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம், 2024-2025 நிதியாண்டுக்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ. 3,586 கோடி நிதியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியை 4 தவணைகளில் தமிழக அரசுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது.

இதன்படி, முதல் தவணை நிதியான ரூ. 573 கோடி, கடந்த ஜூன் மாதமே தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. முதல் தவணை நிதியை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு அனுப்பிய தொடர் கடிதங்களுக்கும், நினைவூட்டல்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து முறையான விளக்கம் கிடைக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதினார். தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

"ரூ. 573 கோடி மட்டுமல்ல, கடந்தாண்டு நமக்கு வர வேண்டிய கடைசி தவணையான ரூ. 249 கோடியையும் நிறுத்திவிட்டார்கள். புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால், நிதியை நிச்சயமாக விடுவிப்போம் என்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் வரைவு 2020-ல் வந்தது. ஆனால், எஸ்எஸ்ஏ என்பது 2018-க்கு முன்பிலிருந்து கேட்காமல் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிதி.

ஆனால் இன்று ஏதேதோ காரணம் சொல்லி, தேசியக் கல்விக் கொள்கையில் இணைந்தால்தான் நிதி என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

பிஎம்ஸ்ரீ ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதில் தேசியக் கல்விக் கொள்கையைச் சார்ந்த அம்சங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேன்கூட்டில் கைவைப்பது போன்றது" என்றார் அன்பில் மகேஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in