பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன்?: அன்பில் மகேஸ் விளக்கம்

"மத்திய அமைச்சரைச் சந்தித்தபோதும்கூட, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம், அதை நோக்கிதான் எங்களுடைய பயணமும் இருக்கும் என்று கூறினேன்."
பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன்?: அன்பில் மகேஸ் விளக்கம்
படம்: https://twitter.com/Anbil_Mahesh

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு என்றும் ஏற்றுக்கொள்ளாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.

பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டம். மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இவை மேம்படுத்தப்படும். 2022-23-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை, 2026-27-க்குள் முழுமையாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்.

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டது.

இதுதொடர்பான மத்திய கல்வி அமைச்சகத்தின் பதிவு:

"பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ என்பது தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கான முன்மாதிரி பள்ளிகள்.

2024-25 கல்வியாண்டுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இடையிலான இந்த ஒப்பந்தம், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான வலுவான உறவைக் காட்டுகிறது."

இந்த நிலையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"புரிந்துணர்வு கையெழுத்திட்டுள்ளோம் என்றால், ஒரு கமிட்டியை உருவாக்குவோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இது மத்திய அரசு ஒதுக்க வேண்டி மூன்றாவது தவணை, நான்காவது தவணைக்கான ரூ. 1,200 கோடி விஷயமல்ல. அடுத்தாண்டு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ. 3,800 கோடியையும் இத்துடன் இணைக்கிறார்கள்.

இவை இரண்டையும் இணைக்கக் கூடாது. இருந்தபோதிலும் வேண்டுமென்றே இவர்கள் இணைக்கிறார்கள். அமைச்சர் என்பதைத் தாண்டி திமுக உறுப்பினராக தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறேன். முதல்வர் எந்த மாதிரியான ஆலோசனையை வழங்குகிறாரோ, நமது மாநிலத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இதற்காக தான் மாநில கல்விக் கொள்கையை வகுத்து வருகிறோம்.

மத்திய அமைச்சரைச் சந்தித்தபோதும்கூட, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம், அதை நோக்கிதான் எங்களுடைய பயணமும் இருக்கும் என்று கூறினேன். மாணவர்கள் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. நேரம் எடுத்துக்கொண்டு கருத்தைக் கூறுங்கள் என்றுதான் மத்திய அமைச்சர் கூறினார்.

இருந்தபோதிலும், எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு என்றும் ஏற்றுக்கொள்ளாது" என்றார் அன்பில் மகேஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in