அரசுப் பள்ளிகள் விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

"இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கத்தினர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது."
அரசுப் பள்ளிகள் விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
1 min read

அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் வசம் தாரை வார்க்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

அடுத்தக் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தனியார் அமைப்புகள் உதவிகளைச் செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

"அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.

"பத்திரிகை செய்திகளில் அரசுப் பள்ளிகளைத் தத்துக் கொடுக்கிறார்கள், தாரை வார்க்கிறார்கள் என்று வரும்போது அது சார்ந்து உடனடியாகக் கண்டன அறிக்கையைக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவசர அவசரமாகப் படித்துவிட்டு ஓர் அறிக்கையை வெளியிடும்போது, மறுஆய்வு செய்து பார்த்திருக்கலாம். சொல்லும்போதே, வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம் என்று சொல்கிறீர்கள்.

என்ன விவரம் என்று நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று நீங்கள் கூறினால், பள்ளிக் கல்வித் துறை சார்பில் எங்களுடைய அதிகாரிகள் சார்பாக நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதலில் எங்களிடம் கேளுங்கள். என்ன பேசியுள்ளோம், என்ன பேசப்பட்டது என்பதைப் பாருங்கள். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை ரூ. 504 கோடி வந்துள்ளது. அதில் ரூ. 350 கோடி மதிப்புடைய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தனியார் பள்ளி சங்கத்தின் தங்களுடையப் பங்களிப்பைச் செய்து தருவதாகக் கூறினார்கள். நான் நன்றியை மட்டும்தான் தெரிவித்தேன்.

இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கத்தினர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in