பகுஜன் சமாஜ் தமிழகத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து பணியாற்றிய வழக்கறிஞர் ஆனந்தன் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கை விடுவித்தவர் வழக்கறிஞர் ஆனந்தன்.
மாநிலத் தலைவர் பதவியை வேண்டாம் என்று பொற்கொடி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாநிலத் தலைவர் பதவிக்குப் பதில், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.