
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
"துரோகம் என்றும் வென்றதாகச் சரித்திரம் இல்லை. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு நாங்கள் இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தவுடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக எங்களுடைய வழியில் நாங்கள் பயணிப்போம். துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது டிசம்பரில் தெரியவரும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு நிபந்தனையின்றி தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்தோம். தற்போது நடைபெறவிருப்பது தமிழ்நாட்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு ஒரு சரியான முதல்வர் வேட்பாளரைத் தருவார்கள் எனப் பொறுமையாகக் காத்திருந்தோம்.
அமித் ஷாவின் முயற்சி நல்லவிதமாக ஒரு நிலையை அடையும் எனக் காத்திருந்தோம். ஆனால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வாய்ப்பில்லை. மூன்று, நான்கு மாதங்களாக தில்லியைச் சேர்ந்தவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் எனக் காத்திருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு தெரியவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பரில் தெரிவிக்கிறோம்" என்றார் டிடிவி தினகரன்.
முன்னதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக தனித்துப் போட்டியிட்டன. பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெற்றிருந்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை அமைத்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இதற்கு அனுமதி கிடைக்காததை அடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறதா என்கிற கேள்வியெழுந்தது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்குமாறு கேள்வியை மடைமாற்றிவிட்டார் டிடிவி தினகரன். கடந்த செப்டம்பர் 1 அன்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றார்.
இந்கச் சூழல்களுக்கு மத்தியில் தான் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். உள்கட்சிப் பூசல்களைக் களைய வேண்டும் என அவர் கண்டித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அமித் ஷாவின் இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதையொட்டி தான் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
TTV Dhinakaran | AMMK | Amma Makkal Munnetra Kazhagam | NDA | NDA Alliance | Amit Shah | Tamil Nadu BJP | Annamalai