அதிமுக தலைமையில் கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு!

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம்.
அதிமுக தலைமையில் கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு!
1 min read

பாஜக, அதிமுக கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், அதிமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி செயல்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஏப்.11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் அமித்ஷா கூறியதாவது,

`உங்கள் அனைவரையும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். அதிமுக, பாஜக கூட்டணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கட்சிகளுடன் இணைந்து, அதிமுகவும் பாஜகவும் சந்திக்கும்.

தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், இந்த கூட்டணி தேர்தல்களை சந்திக்கும். 1998-ல் அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்தன. இது இயல்பான கூட்டணி.

தமிழகத்தின் 39 இடங்களில் இந்த கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. வரும் தேர்தலில் இந்த அதிமுக-பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும்’ என்றார்.

அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் கூறியதாவது,

ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பார்களா அல்லது அதிமுக ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடமாட்டோம். தேர்தல் நேரத்தில் அது சார்ந்த திட்டமிடலில் இணைந்து ஈடுபடுவோம்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதா?

நாங்கள் இணைந்துதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறும். வெற்றிக்குப் பின், மற்ற விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னையாக இருந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உங்கள் கூட்டணி இதற்கு என்ன பதில் கூறப்போகிறது?

மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட், தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களை திமுக பயன்படுத்துகிறது.

பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகிய பின்னரே அதிமுகவுடனான கூட்டணி உறுதிசெய்யப்பட்டதா?

இதில் உண்மை இல்லை, இன்றும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலைதான் இருக்கிறார். பாஜக தேசியப் பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in