

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. அதிமுகவும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக முடிவு செய்து கூட்டணியை இறுதி செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்தச் சூழல்களுக்கு மத்தியில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நியூஸ் 18-க்கு பிரத்யேகமாக நேர்காணல் கொடுத்தார். அப்போது தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி அமித் ஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
"தமிழ்நாட்டில் தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். ஆனால், விஜயுடனும் தொடர்பிலிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. என்ன நடக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?" என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமித் ஷா, "என்ன முடிவு எடுத்தாலும் அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கூட்டாக அமர்ந்து பேசி எடுக்கப்படும். ஒன்று மட்டும் உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்றார் அமித் ஷா.
பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதை நீங்கள் மறுக்கவில்லை என்று பதில் கேள்வி கேட்க்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், "பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் நான் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் நான் சொல்லவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சேர்ந்து முடிவெடுக்கப்படும் என்று தான் நான் கூறினேன்" என்று அவர் கூறினார்.
தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன என்று கேள்வி கேட்கப்பட்டது.
"பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். இதில் என்ன பிரச்னை இருக்கிறது?" என்று அமித் ஷா பதிலளித்தார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவின் இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், ஒரு மாதத்துக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகக் கூறினார்.
The Union Home Minister Amit Shah has clarified regarding holding alliance talks with the Tamilaga Vetri Kazhagam.
Amit Shah | TVK Vijay | AIADMK | NDA |